சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக அனுமதிக்கக்கோரிக் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அரசு தரப்பு சாட்சியாக மாற அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதற்கு ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினர் தரப்பிலும், சிபிஐ தரப்பிலும் ஆட்சேபம் தெரிவித்து மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்கத்தில் அரசு தரப்பு சாட்சியாக மாறுவதாக மனுத் தாக்கல் செய்யவில்லை என ஸ்ரீதர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் சிபிஐ முறையாக விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், காவல் துறையில் 4 முக்கிய சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளதால் ஸ்ரீதரின் சாட்சியம் தேவை இல்லை எனவும், ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்தினர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் இருதரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், ஆகஸ்ட் 4 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அதன்படி நேற்று தீர்ப்பளித்த மதுரை நீதிமன்றம், காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது