டெல்லி வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், பிரதமர் மோடியும் வரவேற்றனர்.
பிலிப்பைன்ஸ் உடனான தூதரக உறவு 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அந்நாட்டு அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸுவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், பிரதமர் மோடியும் வரவேற்றனர்.
பின்னர், பிலிப்பைன்ஸ் அதிபருக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பெர்டினாண்ட் மார்கோஸ், இந்தியா- பிலிப்பைன்ஸ் இடையேயான கூட்டாண்மை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
அரசியல், வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவற்றில் இருநாடுகள் இடையேயான வளர்ச்சி மேம்பட்டுள்ளது எனக் கூறினார். மேலும், உலகப் பொருளாதாரத்தின் மாறிவரும் சூழல் உள்ளிட்டவைகள் குறித்து இருநாடுகளும் ஆராயும் என பிலிப்பைன்ஸ் அதிபர் தெரிவித்தார்.