உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்களை தற்போதைய பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 7 ஆம் தேதிக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசுத் திட்டங்களுக்குத் தனிநபர் பெயரைச் சூட்டக்கூடாது என உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து, தமிழக பொதுத்துறை செயலாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டதால், தற்போதைய பெயரிலேயே தொடர அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன், விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.