ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி, இந்தியா அதிக லாபத்திற்கு விற்பதாகக் கூறும் டிரம்பின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது எனச் சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், கச்சா எண்ணெய் வர்த்தகத்தை மேற்கோள் காட்டி இந்தியா மீதான வரிகளை உயர்த்த டிரம்ப் எடுத்துள்ள முடிவு நியாயமற்றது என்றும், இது சந்தை யதார்த்தங்களைப் புறக்கணிப்பதுடன், வர்த்தக தரவுகளைத் தவறாகச் சித்தரிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுடனான இந்தியாவின் எண்ணெய் வர்த்தகம் முழு வெளிப்படைத் தன்மையுடனும், அமெரிக்காவின் பரந்த புரிதலுடனும் நடந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
மேற்கத்தியத் தடைகள் பாரம்பரிய விநியோகத்தைச் சீர்குலைத்தது என்றும், இதனால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்திய அதிகரித்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து சீனா அதிகளவில் கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்கிறது என்றும், சீனாவை விமர்சிக்காமல் இந்தியாவை நியாயமற்ற முறையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிவைத்துள்ளார் எனவும் சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.