பட்டா வழங்கக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அலுவலகத்தைப் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை முதலமைச்சரின் தொகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமுறை, தலைமுறையாக வசித்துவரும் இன்னல்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிவராஜபுரம், மாரிமுத்து கெனால் தெரு, மாடகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தலைமுறை, தலைமுறையாக வசித்து வருகின்றன.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் வசித்து வந்தால் அவர்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் தங்களுக்குப் பட்டா வழங்க மறுப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலிருந்து வந்திருப்பதாகக் கூறி ஒரு சிலர் சிவராஜபுரம் பகுதி மக்களின் புகைப்படத்தை எடுத்ததோடு அவர்களின் விவரங்களையும் பதிவு செய்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், அவர்களின் மனுக்களைக் கூடப் பெறவில்லை என்பது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொருமுறை தொகுதிக்குள் வரும் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த போதிலும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் தலைநகரில், துணை முதலமைச்சரின் சொந்த தொகுதியின் சட்டமன்ற அலுவலகத்தைப் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.