உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் 60க்கும் மேற்பட்டோர் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரகாசி மாவட்டம் தரலி என்ற பகுதியில் கீர் கங்கா ஆற்றில் மேகவெடிப்பால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் பலர் மண்ணில் புதைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கீர் கங்கா ஆற்றின் மறுபுறத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் பலர் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. காட்டாற்று வெள்ளத்தில் 60க்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படுகிறது.
இதனிடையே சியானா சட்டி என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் யமுனோத்திரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
டேராடூனில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற புஷ்கர் சிங் தாமி, அங்கு நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 130-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்பு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
இதற்கிடையில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தால், சுமார் 25 தங்கும் விடுதிகள் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் திடீரென பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில், கிராம மக்கள் சிக்கியுள்ள பரபரப்பான காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மண்சரிவு ஏற்பட்டபோது சேற்றுக்குள் சிக்கி உயிர்பிழைத்த நபர், சேற்றுக்குள் இருந்து வெளியேறி நடக்க முடியாமல் ஊர்ந்து செல்லும் காட்சி மற்றும் மேகவெடிப்பு காரணமாக மண்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ள காட்சிகள் வெளியாகி உள்ளன.
இதேபோல் உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். கனமழை காரணமாக உத்தரகாண்ட் பகுதியில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நைனிடால் பகுதியில் உள்ள ஹனுமன் கோயில் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சாலையில் நின்றிருந்த பொதுமக்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்நிலையில் இந்தியா-சீன எல்லையை இணைக்கும் மலாரி தேசிய நெடுஞ்சாலை அருகே கனமழை காரணமாக சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது