நாமக்கல் மாவட்டம், வெடியரம்பாளையத்தில் கோயில் நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகளை சிறைப்பிடித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிப்பாளையம் அடுத்த அக்ரஹாரம் பகுதியில் உள்ள விஸ்வேஸ்வரசுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் 18 ஏக்கர் நிலம் வெடியரம்பாளையத்தில் அமைந்துள்ளது. அந்த நிலத்தை ஆக்கிரமித்துள்ள பலர் வீடுகள், வணிக வளாகங்களை கட்டி பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கோயில் நிலத்தை மீட்டு ஒப்படைக்க ஈரோடு இணை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில் வெடியரம்பாளையத்தில் கோயில் நிலத்தில் கட்டப்பட்ட வணிக வளாகங்களுக்கு சீல் வைப்பதற்காக போலீசாருடன் அறநிலையத்துறை அதிகாரிகள் வந்திருந்தனர்.
அப்போது அங்கு கூடிய வணிகர்கள், நிலத்துக்கு முறையாக வரி செலுத்தியிருப்பதால் இடத்தை காலி செய்ய மாட்டோம் என கூறி அதிகாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆக்கிரமிப்பில் உள்ள ஒரு சில வணிக வளாக கட்டடத்திற்கு மட்டும் சீல் வைத்துவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.