திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
குடிமங்கலம் பகுதியை சேர்ந்த மூர்த்தி அவரது மகன்கள் தங்கபாண்டி மற்றும் மணிகண்டன் ஆகியோர் மதுபோதையில் தந்தை மூர்த்தியிடம் தகராறு செய்துள்ளனர். இது தொடர்பாக காவல் அவசர உதவி எண்ணான 100-க்கு அக்கம் பக்கத்தினர் தகவலளித்தனர்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முக வேல் சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு காயமடைந்து காணப்பட்ட மூர்த்தியை ஆம்புலன்ஸில் அனுப்பும் பணியில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதற்கு உடந்தையாக மூர்த்தியும் அவரது இளைய மகன் மணிகண்டனும் சண்முகவேலை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இவரை கொலை செய்ததோடு அங்கிருந்த காவல் வாகன ஓட்டுநரை துரத்தி சென்று தாக்க முயன்றனர்.அங்கிருந்து தப்பியோடிய ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சண்முகவேலின் உடலை கைப்பற்றி தப்பியோடிய தந்தை மற்றும் இரண்டு மகன்களையும் தேடி வருகின்றனர். இதற்கிடையே தப்பியோடிய குற்றவாளிகளை பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த கொடூர சம்பவத்தை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். சண்முகவேலை கொலை செய்த குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளதகாவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.