தமிழகத்தில் மின் கட்டணத்தைக் கேட்டாலே ஷாக் அடிக்கும் என அரசியல் கட்சியினர் விமர்சித்துவரும் நிலையில், அதை மெய்யாக்கும் விதமாகச் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு, கடந்த மாதம் 91 ஆயிரத்து 993 ரூபாய் மின் கட்டணம் வந்திருப்பது அவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த நந்தகுமார் வழக்கமாக 2 மாதத்திற்கு, ஆயிரத்து 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை மின்கட்டணமாகச் செலுத்தி வந்துள்ளார்.
ஆனால், கடந்த மாத மின்கட்டண தொகையைக் கண்ட நந்தகுமார் அதிர்ந்துபோனார். ஏனென்றால், கடந்த 2 மாதத்திற்கு 91 ஆயிரத்து 993 ரூபாய் அவருக்கு மின் கட்டணமாக வந்திருந்தது.
இதையடுத்து மின்வாரிய அலுவலக அதிகாரியிடம் புகாரளித்த அவர், இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளார். அப்போது MRT மீட்டர் ரீடிங் மீண்டும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்த மின்வாரிய அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.