கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுமி உயிரிழந்த நிலையில் ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சீங்குட்டையைச் சேர்ந்த சான்பாஷா – ஆயிஷா தம்பதியின்மகள் அல்ப்பியா தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.
பள்ளி வேனில் வழக்கம் போல் பள்ளி சென்று திரும்பும் அல்ப்பியாவை அழைத்துவரத் தாய் ஆயிஷா, 3வயது மகள் ஆபியாவை அழைத்துச் சென்றிருக்கிறார். வேனில் உதவியாளர் இல்லாததால் அல்ப்பியாவை அழைத்துக் கொண்டு ஆயிஷா நகர, எதிர்பாராத விதமாக ஆபியா வேன் சக்கரத்தில் சிக்கி தாய் கண்முன்னே உயிரிழந்தார்.
தகவலறிந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைக் கேள்விப்பட்ட ஆயிஷாவின் உறவினர்கள், பள்ளி வேன் ஓட்டுநரை கொலை வழக்கில் கைது செய்ய வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால்
அஞ்செட்டி சாலையில் செக்போஸ்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் கங்கை, டிஎஸ்பி ஆனந்தராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.