நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மூன்று பெண் குழந்தைகளைக் கழுத்தறுத்துக் கொலை செய்த தந்தை, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வேப்பங்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு பாரதி என்ற மனைவியும், மூன்று பெண் பிள்ளைகள், ஒரு மகன் உள்ளனர். திங்கட்கிழமை அதிகாலையில் மனைவியும், ஒரு வயது மகனும் படுக்கை அறையில் தூங்க, கோவிந்தராஜ், மூன்று மகள்களுடன் மற்றொரு அறையில் இருந்தார்.
அனைவரும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தபோது, மனைவியை அறையை வெளிப்புறமாகப் பூட்டிய கோவிந்தராஜ் தனது மூன்று மகள்களையும் ஒருவர் பின் ஒருவராகக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டுத் துடிதுடித்த பாரதி, கதவைத் திறக்க முடியாமல் துடித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் பாரதியையும், ஒரு வயதுக் குழந்தையையும் மீட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்த போலீசார், கோவிந்தராஜ் உட்பட 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் கோவிந்தராஜ் விபரீத முடிவு எடுத்தது தெரியவந்துள்ளது.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.