உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட மேகவெடிப்பால் பழமை வாய்ந்த கல்ப் கேதார் சிவன் கோயில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரகாசியில் மேகவெடிப்பு காரணமாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. இதையடுத்து கீர் கங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள், வீடுகள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதில் நூற்றுக்கணக்கானோர் மாயமான நிலையில், அப்பகுதியில் இருந்த பழமை வாய்ந்த கல்ப் கேதார் சிவன் கோயிலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
1900களில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் இக்கோயில் கடும் சேதத்தைச் சந்தித்தது. கோபுரம் மட்டுமே வெளியே தெரியும் அளவிற்கு மண்ணுக்குள் புதைந்து காணப்பட்ட இக்கோயிலில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் கோயிலுக்கு மக்கள் சென்று வழிபடப் பாதையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது கீர் கங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இக்கோயில் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது.