காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 தனிப்படை காவலர்களை 13 ஆம் தேதி வரை காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா ,ஆனந்த், பிரபு ,சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே 5 பேரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்ட நிலையில் மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் 5 தனிப்படை காவலர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது.
சாட்சியங்கள் அளித்த தகவலின் அடிப்படையிலும் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துசென்ற போது நடைபெற்ற சம்பவம் குறித்தும் 5 தனிப்படை காவலர்களிடமும் விசாரணை நடத்தினர்.
யாருடைய உத்தரவின் பேரில் அஜித் குமாரை விசாரணை செய்தீர்கள் ? அஜித் குமாரை ஒருநாள் முழுக்க அடித்து துன்புறுத்தியது ஏன்? அஜித்குமார் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாதது ஏன்? உள்ளிட்ட கோணங்களின் விசாரணை மேற்கொண்டனர்.
2 ஆவது நாள் விசாரணை முடிவடைந்த பின்னர் 5 தனிப்படை காவலர்களை மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பாக சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். பின்னர் 5 பேரையும் ஆகஸ்ட் 13 ஆம் தேதிவரை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.