சென்னையில் போலீசார் எனக்கூறி நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகியை ஏமாற்ற முயன்ற சைபர் மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூர் பகுதியில் கிளோரி ஆனி என்பவர் வசித்து வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வருகிறார். இவரது கணவரை தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தான் சிபிஐ அதிகாரி என்றும், போதைப் பொருள் வழக்கில் உங்களது மகனை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 50 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்ப வேண்டுமென்றும் மிரட்டியுள்ளார். இதையடுத்து தனது மகன் பாதுகாப்பாக இருப்பதை அறிந்த கிளோரி ஆனி, சைபர் க்ரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சைபர் கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.