தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிரான வழக்கில் அரசியல் கட்சியினர் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்க செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுஇடங்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
தனி நீதிபதியின் உத்தரவிலிருந்து விலக்கு அளிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தங்களை இணைக்க விரும்பும் அரசியல் கட்சிகள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்யலாம் என 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து அதிமுக, மதிமுக, திக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மமக, தமிழக வாழ்வுரிமை உள்ளிட்ட கட்சிகள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், விஜயகுமார், சௌந்தர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பூங்கா போன்ற பொது இடங்களில் கொடிக்கம்பங்களுக்கு தனிப்பட்ட பகுதிகளை உருவாக்குவது சாத்தியமா என கேள்வி எழுப்பினர்.
கொடிக்கம்பங்கள் அமைப்பதில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும், நடிகர்களுக்கு கட்அவுட் அமைப்பதற்கும் அரசு உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிரான வழக்கில் அரசியல் கட்சியினர் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்க செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.