திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வாய்க்காலுக்குள் புகுந்ததில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தனது மனைவி திலகவதி மற்றும் 2 குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது நிறைமாத கர்பிணியான திலகவதி மற்றும் 2 குழந்தைகள் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.
துடையூர் என்ற இடத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் இருந்த வாய்க்காலுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் துரிதமாக செயல்பட்ட முருகன் தனது 2 குழந்தைகளையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.
கர்ப்பிணி திலகவதி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திலகவதி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.