திருச்சி மாவட்டம் அழகிரிபுரம் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆண்டு சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்ததை சீர்செய்யாமல் அறிவாலய அரசு அலட்சியப்படுத்துவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், , பயிர் பாசனத்திற்கு பயன்பட வேண்டிய மழை நீர் வீணாகக் கடலில் கலப்பதாகக் கூறி அப்பகுதி விவசாய பெருமக்கள் ஆற்றில் இறங்கி நின்று போராடும் காணொளி மனதை கனக்க வைப்பதாக தெரிவித்துள்ளார்.
தரமற்ற முறையில் தடுப்பணையைக் கட்டியது மட்டுமன்றி ஊருக்கே படியளக்கும் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்து அவர்களின் வயிற்றிலடிக்கும் திமுக அரசின் அராஜகத்திற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பராமரிப்பற்ற அரசு சேமிப்பு கிடங்குகளில் அடுக்கி வைக்கும் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாலும், முறையாக தூர்வாராமல் வறண்டு கிடக்கும் பாசனப் போக்குவரத்தால் பயிர்கள் கருகுவதாலும் ஏகப்பட்ட நஷ்டத்தை சந்தித்து வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளைத் திமுக அரசு தொடர்ந்து புறக்கணிப்பது முறையல்ல எனறும் அவர் கூறியுள்ளார்.
எனவே, அழகிரிபுரம் விவசாயப் பெருமக்களின் அத்தனை கோரிக்கைகளுக்கும் செவிமடுத்து அவற்றை நிறைவேற்றுவதோடு, தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள தடுப்பணைகளைக் கட்டுவதற்கும், சேதமடைந்த தடுப்பணைகளை மேம்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.