பாகிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரே குற்றம்சாட்டியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா அசிஃப், பாகிஸ்தானில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களில் பாதிப் பேர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த பணத்தைக் கொண்டு போர்ச்சுக்கல் நாட்டில் சொத்துக்கள் வாங்கி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ஏதேனும் வழக்குகளில் சிக்கிக்கொண்டால் அதில் இருந்து தப்பிக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருக்கு நெருக்கமான முக்கிய அதிகாரி ஒருவர், தனது மகளின் திருமணத்திற்காக 100 கோடி ரூபாய் வரை பரிசுப் பொருட்கள் பெற்றதாகவும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் இத்தகைய செயல்கள் வெட்கக்கேடானது எனத் தெரிவித்துள்ள அவர், இது பாகிஸ்தானுக்கு கலங்கம் விளைவிப்பதாகக் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சரே இப்படி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது, அந்நாட்டில் நிலவும் ஊழலை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.