சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக நகரம் முழுவதும் குப்பைகள் தேக்கமடைந்துள்ளன. இரவு பகல் பாராமல் சென்னையின் தூய்மையைப் பேணிக்காத்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்தும் அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 10 மண்டலங்களுக்கான தூய்மைப்பணிகள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டிருக்கிறது. பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பை மீறி மீதமுள்ள 5 மண்டலங்களையும் தனியாருக்குத் தாரைவார்க்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் பட்சத்தில், ஏற்கனவே பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிரந்தர தொழிலாளர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பணிபாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்ற புகார் எழுந்துள்ளது. அதோடு ஏற்கனவே அரசு நிர்ணயித்திருக்கும் ஊதியத்தைப் பெறவே போராடும் சூழலில் தனியாரிடம் ஊதியம் பெறுவது என்பது சவால் மிகுந்ததாக இருக்கும் எனவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் காரணமாகச் சென்னையின் முக்கியமான பகுதிகளில் குப்பைகள் தேக்கமடையத் தொடங்கியுள்ளன. ராயபுரம், திருவிக நகர், எழும்பூர், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் என பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மலைபோல குவிந்திருக்கின்றன.
சென்னையில் அடிக்கடி மழை பெய்துவரும் நிலையில், சாலைகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு நிலவுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றன. கொரானா பெருந்தொற்று காலமாக இருந்தாலும் மழை, புயல், வெள்ளம் என இயற்கை பேரிடர்களாக இருந்தாலும் சரி தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றிய களப்பணியாளர்களின் போராட்டத்தைக் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வது ஒட்டுமொத்த மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வருடத்திற்கு ஒரு நாள் தங்களின் அருகில் அமர்ந்து உணவு உண்ணும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பணிநிரந்தர கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.