சீனாவில் ஆயிரக்கணக்கான மக்கள் அடுத்தடுத்து சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அமெரிக்கா, சீனாவில் உள்ள தனது நாட்டு மக்களைத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது. என்ன நடக்கிறது சீனாவில்? விரிவாகப் பார்க்கலாம்.
சீனாவில் அண்மைக் காலமாக சிக்குன்குனியா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். சீனாவின் தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் மட்டும் இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்குன்குனியா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
சிக்குன்குனியா வைரஸ் ஒன்றும் புதியதல்ல என்றாலும், சீனாவில் திடீரென அதன் பரவல் அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3,000 பேர் நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது உண்மையில் அஞ்சத்தக்க எண்ணிக்கையாகும். எனவே, போர்க்கால அடிப்படையில் சீன அரசு நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
சீனாவில் உள்ள போஷன் நகரம் சிக்குன்குனியா பாதிப்பின் மையமாகக் கருதப்படுகிறது. அதேபோல, குவாங்டாங் மாகாணத்தில் 12 நகரங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, சீனா முழுவதும் கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசுக்கள் வளர ஏதுவாக தங்களது வீடுகளைத் தூய்மையற்ற முறையில் வைத்துள்ளவர்களுக்கு, இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
பல பகுதிகளில் சிக்குன்குனியால் பாதிக்கப்பட்டவர்கள், கோவிட் காலத்தைப் போலவே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். காய்ச்சல், மூட்டு வலி, அரிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அமெரிக்கா, சீனாவில் உள்ள தனது நாட்டு மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும், கூடுமானவரை உரிய தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா-வுக்கு பிறகு சீனாவில் ஏதேனும் வைரஸ் வேகமாகப் பரவ தொடங்கினால், அது உலக நாடுகளைத்தான் முதலில் கலக்கமடையச் செய்யும். கொரோனா வைரஸ் கற்றுக் கொடுத்த பாடம் அப்படி.