ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என இந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், ரஷ்யாவுடன் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் பல லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் செய்துள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த இரட்டை நிலைப்பாடு குறித்து, இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
2022ம் ஆண்டு தொடங்கிய ரஷ்ய – உக்ரைன் போர், 3 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்த 3 வருடங்களாக அமைதியாக இருந்துவிட்டு, தற்போது போரை நிறுத்தியே தீருவேன் எனக் களத்தில் இறங்கியுள்ளது அமெரிக்கா.
ஆனால், இந்த போர்நிறுத்தத்திற்கு ரஷ்யா உடன்படவில்லை. எனவே, ரஷ்யாவுடன் யாரும் வர்த்தகம் செய்யக்கூடாது எனவும், மீறி வர்த்தகம் செய்தால் கடுமையான வரிகள் விதிக்கப்படும் எனவும் டிரம்ப் மிரட்டி வருகிறார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால், இந்தியாவிற்கு 50 சதவீதம் வரியையும் அவர் விதித்துள்ளார்.
ஆனால் அமெரிக்காவின் இந்த மிரட்டல் எல்லாம் அப்பட்டமான நாடகம் என்ற விமர்சனம் தொடக்கம் முதலே இருந்து வருகிறது. ஏனெனில், இந்தியாவைக் காட்டிலும், அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனுமே ரஷ்யாவுடன் அதிக வர்த்தகம் செய்துள்ளன. அவை கடந்தாண்டு ரஷ்யாவுடன் செய்த ஏற்றுமதி இறக்குமதிகளைப் பார்த்தாலே போதும். அமெரிக்காவின் நாடகம் புலப்பட்டு விடும்.
2024ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுடன் 70 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் செய்துள்ளது. இந்திய மதிப்பில் இது 61 லட்சம் கோடி ரூபாயாகும். இது இந்தியா மேற்கொண்ட வர்த்தகத்திற்கு இணையானது. எரிபொருள் மட்டுமல்ல ரசாயனங்கள், உலோகங்கள், உணவுப்பொருட்கள், இயந்திரங்கள் என பலவற்றை
ஐரோப்பிய யூனியன் இறக்குமதி செய்துள்ளது.
இதில், ரஷ்யாவுடன் ஐரோப்பிய யூனியன் மேற்கொண்ட ரசாயன வர்த்தகம் மட்டும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய். ஆனால், இந்தியா 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே ரசாயன வர்த்தகம் செய்துள்ளது. அதாவது, இந்தியாவைக் காட்டிலும் 6 மடங்கு அதிகமாக ஐரோப்பிய யூனியன் வர்த்தகம் மேற்கொண்டுள்ளது.
ஐரோப்பிய யூனியன் 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உலோக வர்த்தகம் மேற்கொண்ட நிலையில், இந்தியா வெறும் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மட்டுமே வணிக தொடர்பு கொண்டிருந்தது. இப்போது கூறியவை அனைத்துமே வெறும் இறக்குமதி பற்றியவைதான்.
கடந்தாண்டு மட்டும் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஐரோப்பிய யூனியனில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது இந்தியா செய்த ஏற்றுமதியை விட 7 மடங்கு அதிகமாகும். இன்று இந்தியாவை மிரட்டி வரும் அமெரிக்காவும் ரஷ்யாவுடன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பில் இருந்துள்ளது.
2024ம் ஆண்டு 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது. எதிரி நாடான ரஷ்யாவிடமே இத்தனை தொகைக்கு வர்த்தகம் செய்துள்ளது என்றால், நட்பு நாடான உக்ரைனுடனான வர்த்தக தொடர்பு பல லட்சம் கோடி இருக்கும் எனப் பலர் நினைக்கலாம். ஆனால், வெறும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மட்டும்தான் உக்ரைனிடம் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது.
இப்படி, பல ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்த அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் தான் தற்போது ரஷ்யாவுக்கு எதிராக வாள் சுழற்றுகின்றன. இதனைச் சுட்டிக்காட்டி, அமெரிக்கா பேசுவது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் உள்ளதாகப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.