தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் பரப்பப்படும் விஷமப் பிரச்சாரங்களைத் தகர்த்தெறிந்து மருத்துவப் படிப்பு எனும் கனவை எட்டிப்பிடித்திருக்கிறார் விருதுநகர் மாவட்ட திருச்சுழியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவி பூமாரி. விடா முயற்சியும், தொடர் பயிற்சியும் இருந்தால் நீட் தேர்வில் எளிதில் வெல்லலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் சாதனை மாணவி பூமாரி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள புலிக்குறிச்சி கிராமம் தான் பூமாரியின் பூர்வீக ஊர். தந்தை முத்துப்பாண்டி கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்துவிட்ட நிலையில், தாய் பொன்னழகுவின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வந்துள்ளார் பூமாரி. தாத்தா, பாட்டி ஆகிய இருவரும் ஆடு மேய்க்கும் தொழிலிலும், தாய் பொன்னழகு விறகு வெட்டி விற்கும் வேலையும் செய்து பூமாரி மற்றும் அவரோடு பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளையும் படிக்க வைத்து வந்துள்ளனர்.
திருச்சுழி சேதுபதி அரசுப்பள்ளியில் பயின்ற பூமாரி 2023ம் ஆண்டு 12ம் வகுப்பில் 573 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். சிறுவயதிலிருந்தே மருத்துவப் படிப்பு மீதான அதீத பற்றுக் கொண்ட பூமாரி, கடந்த ஆண்டு பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தும் எம் பி பி எஸ் ஆக வேண்டும் என்ற ஒரே எண்ணத்தால் மீண்டும் நீட் தேர்வுக்குத் தயாராகி வெற்றியும் கண்டுள்ளார். நீட் தேர்வு என்பது அவ்வளவு கடினமானது அல்ல எனவும், பயிற்சி இருந்தால் எளிதில் வெற்றிபெறலாம் என்கிறார் சாதனை மாணவி பூமாரி
சிறுவயதிலிருந்தே மருத்துவப்படிப்பை பயில வேண்டும் என்ற பூமாரியின் கனவை நினைவாக்கியதில் அவரின் தாயார் பொன்னழகுவின் பங்கு அளப்பரியது. விறகு வெட்டி விற்பனை செய்து அதன் மூலம் வரும் வருமானத்தின் மூலம் தன் மகளைப் படிக்க வைத்து அவரின் மருத்துவக்கனவை நினைவாக்கியுள்ளார் பொன்னழகு
நீட் தேர்வு கடினமானது, குளறுபடிகள் நிறைந்தது, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனி எனத் தமிழகம் முழுவதும் பரப்பப்படும் மாய பிம்பங்களுக்கு மத்தியில், கடின உழைப்பும் விடா பயிற்சியும் இருந்தால் நீட் தேர்வில் எளிதில் வெற்றிபெற முடியும் என்பதற்கு தலைசிறந்த உதாரணமாகத் திகழ்கிறார் திருச்சுழியைச் சேர்ந்த பூமாரி.