புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் பணியில் இருந்த இளநிலை உதவியாளர் மீது தாக்குதல் நடத்திய புகாரில் விசிக கவுன்சிலர் மீது வழக்குப்பதிந்து, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக உள்ள ராதாகிருஷ்ணன் என்பவரிடம் விசிக கவுன்சிலர் காளிமுத்து என்பவர் தனது வார்டில் செய்யப்பட்ட பணிக்காக பில் தயார் செய்யும்படி கூறியுள்ளார்.
அப்போது, வேறு ஒரு முக்கியமான பணியில் இருப்பதாக பேரூராட்சி ஊழியர் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த காளிமுத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கடுமையாக தாக்கி உள்ளார். பின்னர், ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டதில், காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இதுகுறித்து இளநிலை உதவியாளர் ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், விசிக கவுன்சிலர் காளிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.