சேலம் மாவட்டம் ஆத்தூரில் நகைக் கடை ஒன்றில் ஆசிட்டை வீசி கொள்ளையடிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆத்தூர் கடைவீதி பகுதியை சேர்ந்த வைத்தீஸ்வரன் என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரும் இவரின் மனைவி செல்வ லட்சுமி மற்றும் கடையில் பணி புரியும் பெண் ஊழியர் ஆகியோர் வழக்கம் போல் கடையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த 2 பேர் நகை வாங்குவது போல் நகைகளை பற்றிய விவரங்களை கேட்டுக்கொண்டு இருந்தனர்.
திடீரென தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை 3 பேர் மீதும் வீசிய நபர்கள் நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். அப்போது சுதாரித்துக் கொண்ட கடையின் உரிமையாளர் வைத்தீஸ்வரன், கூச்சலிட்டபடி ஒருவரை மடக்கி பிடித்தார்.
தப்பி ஓடிய மற்றொரு நபரை பொதுமக்கள் துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். அப்போது துப்பாக்கியை காட்டி மிரட்டிய அந்த நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் ஒருவர் சிறுவாச்சூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. காவல் நிலையத்திற்கு அருகிலேயே நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.