விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த சுனிலை பணியிடை நீக்கம் செய்யும் தனி நீதிபதியின் உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியில் நிலம் தொடர்பான பிரச்சனையில் பட்டியலினத்தைச் சேர்ந்த நபரை, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் சாதியைக் கூறி திட்டி கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்காத கோட்டக்குப்பம் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த சுனிலை பணியிடை நீக்கம் செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை இயக்குநருக்குத் தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வு பணியிடை நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து வழக்கை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.