ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, இந்தியாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியாவை கடுமையாக விமர்சித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளார். இத்தகைய சூழலில் ரஷ்ய அதிபர் புதினுடன், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார்.
அப்போது இந்தியா- ரஷ்யா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும், இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம், ரஷ்ய அதிபர் புதின் எடுத்துரைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்போது இந்தியாவிற்கு வரும்படி ரஷ்ய அதிபர் புதினுக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த ஆண்டு இந்தியாவுக்கு வருகை தரும் அதிபர் புதினை வரவேற்க ஆவலுடன் இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.