கன்னியாகுமரி மாவட்டம், நட்டாலம் பகுதியில் விதிமுறைகளை மீறி கல்குவாரி செயல்படுவதாகக் கூறப்படும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்குப் பின் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
நட்டாலம் பகுதியில் விதிமுறைகளை மீறி கல்குவாரிகள் இயங்குவதாகவும், இதனால் அருகில் உள்ள வீடுகளில் அதிர்வு, துகள்களால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சுரங்கத்துக்கு இடைக்கால தடைவிதித்தும், குவாரியில் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டவிரோத கல்குவாரிக்கு பின் உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் குவாரியில் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
ஆனால் அதனை மாவட்ட ஆட்சியர் செய்யாததால் அவர் மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் கல்குவாரி உரிமையாளர்களையும், மனுதாரர்களையும் வரவழைத்து விசாரணை நடத்தினார்.
பலமுறை மனு அளித்தும் கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியர், வழக்கு தொடர்ந்த உடனே விசாரணை நடத்துவது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.