விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வீட்டின் சாவியைத் தவறவிட்ட நபர், புகைக்கூண்டு வழியே வீட்டிற்குள் செல்ல முயன்றதில் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
மம்சாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர், தந்தை வீட்டில் இருந்த தனது மனைவியை அழைக்கச் சென்றார். அப்போது, அங்கேயே இரவு தங்கிவிட்டு காலையில் வருவதாக மனைவி தெரிவித்ததால் அங்கிருந்து புறப்பட்ட பிரபாகரன், மது போதையில் வீட்டின் சாவியைத் தவறவிட்டுள்ளார்.
இதனால் செய்வதறியாது தவித்த அவர், மாடியில் உள்ள புகைக்கூண்டின் வழியே வீட்டிற்குள் இறங்க முயற்சித்துள்ளார்.
அப்போது கூண்டின் நடுவே சிக்கிய அவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். காலையில் வீட்டிற்கு வந்த அவரின் மனைவி, வீட்டின் சாவியைக் கீழே கண்டெடுத்து, உள்ளே சென்றார்.
அப்போது, பிரபாகரன் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரபாகரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.