கரூரில் தீண்டாமை சுவர் எழுப்பப்பட்ட விவகாரத்தில் இருதரப்பு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முத்துலாடம்பட்டி கிராமத்தில் இருபிரிவைச் சேர்ந்த சமூகத்தினர் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இங்கு ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் இடத்தை சுற்றிலும் சுவர் எழுப்பினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர் காவல் நிலையத்தில் புகாரளித்ததோடு சுவரை அகற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுவர் எழுப்பிய தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய வருவாய்த்துறை அதிகாரிகள் உடன்பாடு எட்டப்படாததால் நோட்டீஸ் ஒட்டி சென்றனர். அதில் சுவர் அகற்றப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் சுவரை இடித்து அகற்றுவோம் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் அவர்களை அனுப்பி வைத்த நிலையில், முத்தலாடம்பட்டியில் இரு தரப்பு மோதல் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதனால் அங்கு 400க்கும் மேலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.