நீர் நிலைகளில் கழிவுநீர், இரசாயன கழிவுகள் கலப்பது தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரியுமா? என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி திருவிழா வரும்போது தான் தமிழகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்று ஒன்று இருப்பதே தெரிய வருவதாக விமர்சித்துள்ளார்.
பொங்கலின் போது புகையில்லாத பண்டிகை என விளம்பரம் செய்வதுபோல், பக்ரீத்தின் போது இரத்தமில்லாத பண்டிகை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் பேசுவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தின் அனைத்து ஆறு, குளங்கள், ஏரிகளில் மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்தவும், தீர்வு காணவும், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழாவினை இயற்கையோடு இணைந்த விழாவாக அமைய இந்து முன்னணி கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் தமிழகத்திற்கு நிரந்தர பயனுள்ளதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.