இந்து மதம்குறித்து அவதூறாகப் பேசியதைக் கண்டித்து மதுரையில் போராட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
இந்து மதம் மற்றும் இந்து கடவுள்குறித்து அவதூறாகப் பேசி வரும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவருக்கு ஆதரவாக மத நல்லிணக்கம் என்ற பெயரில் மதுரை புதூரில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்திருந்தது.
இதனைக் கண்டித்து அதேபகுதியில் போராட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்பினர் அனுமதி கோரினர். ஆனால் பழங்காநத்தம் பகுதியில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியது.
இதையடுத்து போராட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் கடைசி நேரத்தில் போலீசார் அனுமதி மறுத்ததாகத் தெரிகிறது.
அதனால் இந்து முன்னணி அமைப்பினர் தடையை மீறிப் புதூர் பேருந்து நிலையம் நோக்கி வாஞ்சிநாதனுக்கு எதிராகக் கண்டன முழக்கம் எழுப்பியவாறு பேரணி சென்றனர்.
அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டதால் 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.