தேனி அருகே தலையில் ஈட்டி பாய்ந்த மாணவர் மூளைச்சாவு அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பையைச் சேர்ந்த சந்திரன் என்பவர் குடும்பத்துடன் கேரளாவில் தங்கி ஏலத்தோட்டத்தில் பணியாற்றி வருகிறார்.
இவரது 14 வயது மகன் சாய்பிரசாத் ராயப்பன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தங்கி 9ஆம் வகுப்பு பயின்று வந்தார்.
பள்ளி மைதானத்தில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது தபேஷ் என்பவர் வீசிய ஈட்டி மாணவர் சாய்பிரசாத் தலையில் பாய்ந்துள்ளது. இதில், படுகாயமடைந்த மாணவரை ஆசிரியர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு 2 நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த மாணவர் மூளைச்சாவு அடைந்தார். இந்தத் துயர சம்பவம்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.