தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்கப்படுவதற்காகத் தீர்மானத்திற்கு தடை கோரிய வழக்கில் மாநகராட்சி பதிலளிக்க அவகாசம் வழங்கிச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சுரேந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், பதில் மனுதாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், 2 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் தெருக்களில் போராடி வருவதாகவும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனிடையே, தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமப்படுவதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் அவசர முறையீடு செய்யப்பட்டது.
அப்போது அரசு தரப்பில், சேப்பாக்கம், எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, அவசர முறையீட்டை மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.