கள்ளக்குறிச்சி அருகே தரைபாலத்தின் மேலே செல்லும் மழை நீரில் ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கல்வராயன் மலை, சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஈரியூர் கிராமத்திலிருந்து மாங்குளம் வழியாகச் செல்லும் சாலையில் உள்ள தரைபாலம் நீரில் மூழ்கியது. இதனால், கும்பகொட்டாய் பகுதியில் வசித்து வரும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தரைபாலத்தை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். ஒரு சிலர் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் தரைபாலத்தை கடந்து சென்றனர்.
மழை காலங்களில் தரைபாலத்தை கடக்க முடியாமல் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகுவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், தமிழக அரசு உடனடியாக உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.