nvidia நிறுவனத்தில் பணியாற்றும் 80 சதவீத ஊழியர்கள் மில்லியனர்களாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எப்படி சாத்தியமானது? இந்தச் செய்தி தொகுப்பில் விரிவாக பாா்க்கலாம்.
வீடியோ கேம்களுக்கான சிப்களை உருவாக்கும் நிறுவனங்களில் முதன்மையானது, nvidia. தைவானை பூர்விகமாகக் கொண்ட அமெரிக்கரான Jensen Huang, 1998ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.
உலகின் பல நிறுவனங்கள் NVIDIA தயாரிக்கும் சிப்களைதான் அதிகம் பயன்படுத்தி வருகின்றன. தொழில்நுட்ப துறையில் ஆதிக்கம் செலுத்தும் கூகுள், பேஸ்புக், ஓபன் ஏஐ உள்ளிட்ட நிறுவனங்கள் கூட, NVIDIA நிறுவனத்தின் சிப்களைதான் நம்பி உள்ளன.
இப்படி, தொழில்நுட்ப துறையில் NVIDIA ஆதிக்கம் செலுத்துவதால், அதன் நிறுவனர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு, சுமார் 13 லட்சம் கோடி ரூபாய். ஒரு நிறுவனத்தின் சிஇஓ பில்லியனராக இருப்பது சாதாரண விஷயம்தான்.
ஆனால், ஒரு நிறுவனத்தின் ஊழியர்களில் 80 சதவீதம் பேர் மில்லியனராக இருப்பது சாதாரணமானது அல்ல. அந்தச் சாதனையைதான் NVIDIA படைத்துள்ளது. அந்த 80 சதவீதம் பேரிலும், பாதி ஊழியர்களின் சொத்து மதிப்பு 25 மில்லியன் டாலராக உள்ளது.
இதனை இந்திய மதிப்பில் கணக்கிட்டால், சுமார் 200 கோடி ரூபாய் வரும். NVIDIA ஊழியர்களின் இந்த அதீத பொருளாதார வளர்ச்சிக்கு ஒரே காரணம், அந்நிறுவனத்தின் சிஇஓ Jensen Huang-தான். தனது நிறுவன ஊழியர்களை ஊக்குவிக்கப் பல்வேறு சலுகைகளை அவர் அளித்து வருகிறார். NVIDIA நிறுவன பங்குகளை அதன் ஊழியர்கள் சலுகை விலையில் வாங்கவும் அவர் வழிவகை செய்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், நமது ஊழியர்களை நாம் நன்றாகப் பார்த்துக் கொண்டால், மற்ற அனைத்தும் தானாகவே நல்ல விதத்தில் நடைபெறும் எனக் கூறுகிறார்.
மேலும், தனது நிறுவனத்தில் பணியாற்றும் 42 ஆயிரம் ஊழியர்களின் ஊதிய விவரங்களை மாதம்தோறும், தானே சரிபார்த்து வருவதாகவும் Jensen Huang தெரிவிக்கிறார். இதற்காகப் பிரத்யேக app-களை பயன்படுத்தி வருவதாக விளக்கம் அளிக்கும் Jensen Huang, உலகில் உள்ள எந்த சிஇஓ-வை காட்டிலும், அதிக பணக்காரர்களை, தான் உருவாக்கியுள்ளதாகப் பெருமிதம் தெரிவிக்கிறார்.
ஊழியர்கள் நலனில் அவர் காட்டும் அக்கறை, அனைவருக்கும் முன்னுதாரணமாக இருப்பதாகப் பலரும் தெரிவிக்கின்றனர். Jensen Huang குறித்து NVIDIA நிறுவன ஊழியர்களிடம் கேட்டால், ஒன்றைதான் சொல்வார்கள். அது, ”எங்க மொதலாளி. நல்ல மொதலாளி.”