200 ஆண்டு கால அடிமைத் தனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோல் சுதந்திரம் கிடைத்து விட்டது. என்ற சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும், கூடவே பெரும் அச்சுறுத்தலும் இருந்தது. தேசப் பிரிவினை ஏற்படுத்திய ஆறாத காயங்கள் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆகஸ்ட் 11ம் தேதி, கொல்கத்தா நகருக்கு வெளியே இருந்த சோடேபூர் ஆசிரமத்தில் தங்கியிருந்த காந்தி முஸ்லீம்கள் மீதான எந்த வன்முறைகளிலும் இந்துக்கள் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
தேசப் பிரிவினையில், கொல்கத்தா, இந்து வங்காளத்துக்கும், டாக்கா முஸ்லீம் வங்காளத்துக்கும் என முடிவாகி இருந்தது. இன்னும் 5 நாட்களில், மேற்கு வங்கத்தில் முஸ்லீம் லீக் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்.
இப்படிப் பட்ட சூழலில், கொல்கத்தாவில் இருக்கும் முஸ்லீம்களைப் பாதுகாக்க ஒரே வழி, ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை காந்தியை கொல்கத்தாவிலேயே தங்க வைத்துவிட வேண்டும் என்று, அப்போதைய ஒன்றுபட்ட வங்காளத்தின் பிரதமர் சுராவர்தி உறுதியாக இருந்தார்.
அதேநேரத்தில், கராச்சியில், உள்ள நாடாளுமன்றத்துக்கு முகமது அலி ஜின்னா, அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் வந்திறங்கினார். லியாகத் அலிகான் உள்ளிட்ட சில தலைவர்கள் ஜின்னாவுக்கு வரவேற்பளித்து அழைத்துச் சென்றனர்.
பாகிஸ்தானின் அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் ஜோகிந்திரா நாத் மண்டல் தலைமையில் தொடங்கியது. அரசியல் அமைப்பு சபையின் தலைவராக ஜின்னா ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
முதன்முறையாக, அக்கூட்டத்தில் உரையாற்றிய ஜின்னா, உலகம் போற்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதும், இறையாண்மை மிக்க ஒரு நாடாக உயர்ந்து நிற்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், பிரிவினையைத் தவிர வேறு எந்த நல்ல முடிவும் தன்னிடம் இல்லை என்று கூறிய ஜின்னா பாகிஸ்தானில் அனைத்து மதமும் சமம், இது இன்றும் என்றும் நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டார். அப்படி என்றால் ,இஸ்லாமியருக்கான பாகிஸ்தானை ஏன் உருவாக்க வேண்டும்? என்ற கேள்விக்குப் பதில் சொல்லாமலேயே ஜின்னா தன் உரையை முடித்தார். பிறகு, பாகிஸ்தானின் தேசிய கொடி தேர்ந்தெடுக்கப் பட்டது.
முன்னதாக, பிரிட்டிஷ் அரசின் கீழ்,560 சமஸ்தானங்கள் A பிரிவு என வரையறுக்கப் பட்டிருந்தன. சிக்கிம், பூட்டான் மற்றும் பலுசிஸ்தானின் கலாத் ஆகியவை B பிரிவில் வைக்கப் பட்டிருந்தன. 2000 ஆண்டு பழமையான கலாத் நகரின் தலைவர் கானுடன் முஸ்லீம் லீக்கின் பிரிட்டிஷ் பிரதிநிதி மீர் அகமது யார் கான் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அதன்படி, கலாத் இனி, பாரதத்தின் ஒரு அங்கம் இல்லை என்றும், ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல், தனி சுதந்திர நாடாகச் செயல்படும் என்று அறிவிக்கப் பட்டது. உடனடியாக, புதிய நாட்டின் முதல் தலைவராக மீர் அகமது யார் கான் பொறுப்பேற்றார். பலுசிஸ்தான் என்ற தனி சுதந்திர நாடு உருவானது.
இந்நிலையில், மகாராஜா புத்தசந்திராவின் தலைமையில் இருந்த மணிப்பூர், இந்தியாவுடன் இணைந்தது. ஹைதராபாத் இந்தியாவுடன் இணைவதற்கான கால அவகாசம் மேலும் 60 நாட்கள் நீட்டிக்கப் பட்டது. இந்தியாவில் சுதந்திர விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கி இருந்தன.
ஆகஸ்ட் 14 ஆம் தேதி, இந்தியா கேட்டில், இரவு 8. 10 முதல் 8.45 மணிக்குள் தேசிய கொடி ஏறுதல், சரோஜினி நாயுடுவின் செய்தி, நேருவின் செய்தி என்ற வரிசையில், இரவு அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் அதிகார பரிமாற்றம் என அனைத்து நிகழ்ச்சிகளையும், ஆல் இந்தியா ரேடியோ நேரலையில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டன.
அதே நேரம், டெல்லியில், ஜின்னாவின் பங்களாவை விலைக்கு வாங்கிய டால்மியா இல்லத்தில், பசுவதை தடுப்புப் பேரவையின் மாநாடு நடைபெற்றது. பசு பராமரிப்பு பாரத குடிமக்களின் அடிப்படை உரிமை என்றும், பசு மற்றும் அதன் சந்ததியைப் பாதுகாப்பது கடமை என்றும், தேசத்தின் வளர்ச்சியில் பசுக்களுக்கு முக்கிய பங்கு இருப்பதால், ஆண்டுதோறும், பல கோடி கணக்கான பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
அன்று மாலை கல்கத்தாவில் முஸ்லீம்களின் வன்முறை வெறியாட்டம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது. எங்குப் பார்த்தாலும் எரிந்து சாம்பலான இந்து வீடுகள். தீவைத்து கொளுத்தப்பட்ட இந்துக் கோயில்கள்.
தன்னுயிரைத் தவிர சொந்த ஊரிலேயே அனைத்தையும் இழந்து விட்ட இந்துச் சமுதாயம், காந்தியிடம் இனியும் எதை எதிர்பார்க்க முடியும்? கலவரப் பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காந்தி, இப்படிப் பட்ட கோரக் காட்சிகளைக் காண்போம் என்று கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.