இஸ்ரேலுக்கு வழங்கி வந்த ஆயுத சப்ளையை ஜெர்மனி அதிபர் நிறுத்தியுள்ளார். இதற்கு ஜெர்மனியின் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்ன காரணம்? விரிவாகப் பார்க்கலாம்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 22 மாதங்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. போரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் இஸ்ரேல், காசாவின் 80 சதவீத பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. எஞ்சிய 20 சதவீத பகுதிகளையும் கைப்பற்ற அந்நாடு திட்டமிட்டது.
ஆனால், அவ்வாறு செய்யும் பட்சத்தில் அங்குள்ள பணய கைதிகள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக, இஸ்ரேலின் ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்தார். இருந்தபோதும், காசாவை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான ஒப்புதலை இஸ்ரேல் அமைச்சரவை வழங்கியது.
இந்த முடிவுக்குப் பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இஸ்ரேலுக்கு வழங்கி வந்த ராணுவ உதவிகளை இனி நிறுத்திகொள்ள போவதாக அறிவித்துள்ளார்.
ஜெர்மனி அதிபரின் இந்த அறிவிப்பு, உள்நாட்டிலேயே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆளும் கட்சியின் சகோதர கட்சியாக அறியப்படும் Christian Social Union-ம் அதிபரின் முடிவைக் கண்டித்துள்ளது. அதிபரின் இந்த முடிவுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும், தனது முடிவுகுறித்து அதிபர் போதிய விளக்கங்களை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், வரும் நாட்களில் கூட்டணி கட்சிகள் இதுகுறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. ஜெர்மனி நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சர் Horst Seehofer, ராணுவ உதவியை அரசு நிறுத்தியது, தவறான வெளியுறவுக்கொள்கை உதாரணமாக விளங்குவதாக விமர்சித்துள்ளார்.
இப்படி, கூட்டணி கட்சியினர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். சரி, இவர்களை எப்படியாவது சமாதானப்படுத்தி விடலாம் எனப் பார்த்தால், ஜெர்மனி அதிபருக்குத் தற்போது சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பிவிட்டது. arsten Müller என்ற எம்பி., இந்த விவகாரம் தொடர்பாகச் சொந்த கட்சியிலிருந்து முதல் குரலை எழுப்பியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நேட்டோ நாடுகளையும், ஜெர்மனியின் ராணுவத்தையும் பலப்படுத்த வேண்டும் என்ற பாதுகாப்புதுறை அமைச்சகத்தின் முயற்சியை, அதிபரின் இந்த முடிவு அலட்சியப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
சொந்த கட்சியைச் சேர்ந்த மற்றொரு செனட்டரான Joe Chialo, இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை திரும்பப் பெற்றது ஜெர்மனி அதிபரின் ஆணவ செயல் எனச் சாடியுள்ளார். இப்படி சொந்த கட்சி, எதிர்க்கட்சி என இரு தரப்பில் இருந்தும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார் ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ். இப்போது அவருக்கு முன்னால் இரண்டே வாய்ப்புகள்தான் உள்ளன.
ஒன்று, முன்வைத்த காலைப் பின் வைப்பது. அதாவது, பழையபடியே இஸ்ரேலுக்கு ராணுவ உதவி செய்வது. மற்றொன்று சொந்த கட்சியினரின் எதிர்ப்பையும் மீறித் தனது முடிவில் திடமாக இருப்பது. என்ன செய்யப் போகிறார் பிரீட்ரிக் மெர்ஸ்? சிறிது நாட்களில் தெரிய வரும்.