ராமர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாடலாசிரியர் வைரமுத்துவை கண்டித்து, புதுச்சேரியில் அவரது உருவ படத்தைக் கிழித்து எரிந்து பாஜக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற பாடலாசிரியர் வைரமுத்து ராமர் குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது பேச்சுக்கு இந்து அமைப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் வைரமுத்துவின் பேச்சைக் கண்டித்து, புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் அருகே அம்மாநில பாஜக மகளிரணி தலைவி தாமரை செல்வி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அம்மாநில பாஜக தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வைரமுத்துவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் வைரமுத்துவின் உருவப்படத்தை கிழித்து எரிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.