தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 207 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை என்றால் திமுக அரசுக்கு மக்கள் மூடுவிழா நடத்துவார்கள் என பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக வீழ்ச்சியடையச் செய்து திமுக அரசு மூடுவிழா நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களே இல்லாவிட்டாலும் கூட, வகுப்புக்கு ஓர் ஆசிரியரை நியமித்து உள்ளூர் மக்களிடம் பரப்புரை செய்து மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் இல்லை என்று கூறி பள்ளிகளை மூடிவிடக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசுப் பள்ளிகள், கல்லூரிகளைச் சீரழித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், தமிழ்நாடு எப்போதுமே கூடுதல் பள்ளிகளைத் திறந்தவர்களைத் தான் கொண்டாடி வருகிறதே தவிர, மூடியவர்களை அல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை உணர்ந்து 207 பள்ளிகளையும் தொடர்ந்து நடத்திக் கூடுதல் ஆசிரியர்களை நியமித்து மாணவர் சேர்க்கையை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் திமுக அரசுக்குத் தமிழக மக்கள் மூடுவிழா நடத்துவார்கள் எனவும் அன்புமணி எச்சரித்துள்ளார்.