திருமணத்தை மீறிய உறவு காரணமாகக் குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட சாகும் வரை தண்டனையை ரத்து செய்யக்கோரி அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு குறித்து காவல்துறை பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குன்றத்தூரைச் சேர்ந்த அபிராமி திருமணத்தை மீறிய உறவு காரணமாகப் பெற்ற குழந்தைகளுக்குப் பாலில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்தார்.
குழந்தைகளைக் கொன்ற வழக்கில் அபிராமி மற்றும் பிரியாணி கடை ஊழியர் மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அபிராமி மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து காவல்துறை பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.