வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் இருப்பதாக அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சிறப்பு படை காவலர்கள் தாக்கி இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழக்கின் முக்கிய சாட்சிகளான கோயில் ஊழியர்கள், அஜித் தரப்பு வழக்கறிஞர் கார்த்திக் ராஜா ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி, மாவட்ட நீதிபதி அடங்கிய நிலைக்குழுவிடம் முறையிடுமாறு நீதிபதி தெரிவித்த நிலையில், சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நிலைக்குழு உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், தனக்கும், தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்கக்கூறி அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் கார்த்திக் ராஜா, நிலைக்குழுவிற்கு மனு அளித்துள்ளார். அதில், வழக்கை நடத்தக்கூடாது என்ற கோணத்தில் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.