சென்னை ரிப்பன் மாளிகையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரத்தை வலியுறுத்தியும் கடந்த 1-ம் தேதி முதல் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தது. ஆகையால், சென்னை ரிப்பன் மாளிகையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளுக்கும், போராட்டத்திற்கும் எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை எனவும் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.