ரஷ்யாவிடம் இருந்து சீனா அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கி வரும் நிலையில், இந்தியாவுக்கு மட்டும் டிரம்ப் வரி விதித்ததற்கான காரணம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சீனாவுக்கு வரிவிதித்தால் அது அமெரிக்காவுக்கே BACKFIRE ஆகிவிடும் என்பதால்தான், டிரம்ப் வரிவிலக்கு அளித்திருப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வரியை உயர்த்தி நெருக்கடி அளித்தார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதி வழங்குவதாகக் குற்றம்சாட்டிய டிரம்ப், இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்தார். சீனாவுக்கு 30 சதவிகிதம் வரி விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் அதிரடியாக வரியை உயர்த்தியது.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் வெடிக்க, கோபத்தின் உச்சிக்கே சென்ற டிரம்ப், சீனாவுக்கு 145 சதவிகித வரியை விதிப்பதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் கைகொடுக்க, சீனா மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் டிரம்ப்.
ஆனால் இந்தியாவை விட ரஷ்யாவிடம் அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த சீனாவுக்கு வரி விதிக்காமல் சலுகை காட்டியது உலக நாடுகள் மட்டுமல்லாமல், உள்நாட்டிலும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதில் சிக்கலான பிரச்சனை இருப்பதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
சீனா மீதான வரி விதிப்பு பிரச்சனையால், அமெரிக்கப் பொருளாதாரம் ஏற்கனவே மந்த நிலையில் உள்ளது, டிரம்ப் வரி விதிப்பைக் கையில் எடுக்கும்பட்சத்தில் மேலும் கீழ் நோக்கிச் செல்லும். இதன் காரணமாகப் பாகிஸ்தானை ஆதரித்துள்ள அமெரிக்கா, இந்தியா மீது தேவையற்ற அழுத்தங்களைக் கொடுத்து, தனது கோரிக்கைகளைத் திணிக்கப் பார்க்கிறது.
2024ம் ஆண்டு ராணுவத்திற்குத் தேவையான சர்க்யூட் போர்டுகள், இயந்திரங்கள், பொம்மைகள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை 462.6 பில்லியன் டாலர் அளவுக்குச் சீனாவிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது.
மே 2025 நிலவரப்படி, அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களில் சீனா தோராயமாக 756.3 பில்லியன் டாலர் வைத்திருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கக் கருவூல பத்திரங்களை அதிகளவில் வைத்துள்ள 2வது பெரிய நாடு சீனாவாக உள்ளது.
வரி விதிப்பு நடவடிக்கைக்குச் சீனா பதிலடி கொடுக்குமாயின், அது அமெரிக்கப் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துவிடும் என்பதால், பின்விளைவுகளுக்கு அஞ்சி, டிரம்ப் வரி விலக்கு அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் முழுமை பெறாத நிலையில், டிரம்ப் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். அதே நேரத்தில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு அடிபணிய மாட்டோம் என்று இந்தியா தெள்ளத்தெளிவாகக் கூறியிருப்பது டிரம்ப்பை எரிச்சலுடைய செய்து வரி விதிப்புக்கு வழிவகுத்தது. பாகிஸ்தானை திருப்திப்படுத்த இந்தியா மீது டிரம்ப் வரி விதித்திருப்பதாகக் கூறும் நிபுணர்கள், பாகிஸ்தானை மடியில் உட்கார வைப்பதே தனக்குத் தானே தீ வைத்துக் கொள்வதற்குச் சமம் என்றும் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் 2வது முறையாக அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியிருந்தார். குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய ரிலையன்ஸ் குழுமத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பாலையை குறிவைத்துத் தாக்குவோம் என்றும் பேசியிருந்தார்.
அமெரிக்க மண்ணில் இருந்தபடி, இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் ராணுவ தளபதி பேசுவதை அனுமதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வேடிக்கை பார்த்தது பெரும் விமர்சனத்திற்கு வித்திட்டது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீரின் கொக்கரிப்புக்கும், இந்தியா மீதான வரி விதிப்பிற்கும் இடம் கொடுத்ததன் மூலம், இந்தியாவை அடிபணிய வைக்க டிரம்ப் கடுமையாக அழுத்தம் கொடுப்பது சர்வதேச அளவில் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று துடிக்கும் டிரம்ப், உலகை அச்சுறுத்தும் வகையில், பாகிஸ்தான் ராணுவ தளபதியை அணு ஆயுதம் குறித்துப் பேச வைத்திருப்பது முரண்பாடாகவும் பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் டிரம்பின் விளையாட்டுகளை நன்கு அறிந்து வைத்துள்ள பிரதமர் மோடி, அமெரிக்க வரி விதிப்புக்கு அஞ்சாமல், விவசாயிகள் நலனில் இந்தியா எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்று அதிரடியாக அறிவித்தார்.
வர்த்தகப் போர் மூலம் அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தையும் தவிடுபொடியாக்கினார். அதுமட்டுமின்றி நோபல் பரிசுக்கு இந்தியா தன்னை பரிந்துரைக்காததும், இந்தியா – பாகிஸ்தான் யுத்தத்தில் மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் கூறியதை இந்தியா மறுத்ததும், இந்தியா மீதான வரி விதிப்பு திணிப்புக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.