கூகுள் குரோமை 3 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கத் தயார் என்று Perplexity என்ற AI ஸ்டார்ட்அப் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் யாருடையது, எதற்காகக் கூகுள் குரோமை வாங்க முன்வர வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.
உலகம் முழுவதும் அதிகமான பயனர்களைக் கொண்டது பிரவுசராக உள்ளது கூகுள் குரோம்… கணினி முதல் சின்னஞ்சிறிய ஸ்மார்ட்போன்கள் வரை கூகுள் குரோமை பயன்படுத்தாத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு அது இணையவாசிகளிடம் கலந்துள்ளது.
கூகுள் நிறுவனம் சட்டவிரோதமாகத் தேடல் சந்தையை குரோம் பிரவுசர் மூலம் ஏகபோகமாக்கியது என அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
உலகளாவிய பயன்பாட்டில் உள்ள கூகுள் குரோம் அமெரிக்காவில் மட்டும் 61 சதவீதம் பங்கைக் கொண்டுள்ள நிலையில், குரோம் பிரவுசரை விற்பனை செய்தால், பயனர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கூகுளின் இணைய ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், Perplexity என்ற AI ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரியுமான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், கூகுள் குரோமை 3 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க தயாராக உள்ளதாக அறிவித்திருக்கிறார். Chrome-ஐ ஒரு திறமையான மற்றும் சுதந்திரமான நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தவே, விலைக்குக் கேட்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
Perplexity ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கி மூன்று ஆண்டுகளே ஆன நிலையில், அந்நிறுவனத்தின் மதிப்பு 1.50 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், AI பிரவுசர் பந்தயத்தில் பெர்ப்ளெக்ஸி எதிர்கொள்ளும் வலுவான போட்டியாளர்களில் ஒருவராக குரோம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கூகுளின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.