தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்குவதற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க முடியாது என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
15 ஆண்டுகள் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களைக் குப்பைகளைப்போல் தூக்கி எறியக் கூடாது எனவும் தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டால் 500 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், பணியாளர்களை வீசி எறியப் போவதில்லை; வேலையை விட்டு வெளியேற்றப்படவும் மாட்டார்கள் எனக் கூறினார்.
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 2 ஆயிரம் பேருக்கு ஊதியத்துடன், வருங்கால வைப்பு நிதி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகளுடன் வேலை பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், தூய்மைப் பணியாளர்கள் பணிக்குத் திரும்புவதற்கான அவகாசத்தை வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாகச் சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதி கே.சுரேந்தர் தள்ளிவைத்தார்.