மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்கும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகச் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது புகார் எழுந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து நடைபெற இருந்த பொதுமக்களின் போராட்டத்திற்கு அனுமதி மறுத்திருக்கும் காவல்துறையால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
சேலம் – திருச்சி பிரதான சாலையில் ராஜ சபரி திரையரங்கம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தில் முஸ்லீம்கள் ஒரு பகுதியையும், இந்துக்கள் ஒரு பகுதியையும் மயானமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக மயானத்தின் உட்பகுதியில் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்ட முஸ்லீம்கள், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அப்பணியை நிறுத்தினர். மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் என்பதால் அந்த இடத்தில் கட்டுமான பணிகளுக்கு அனுமதிக்க முடியாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.
முஸ்லீம்களுக்குப் பட்டா வழங்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுக் குறிப்பிட்ட நிலம் மாநகராட்சிக்குச் சொந்தமானது என வருவாய்த்துறையில் ஆவணங்கள் மாற்றப்பட்டாலும், இந்து முன்னணி சார்பில் தொடர்ந்து எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டு வந்தன.
நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், மயானத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீடு கட்டுவதாகக் கூறி நடைபெறும் கட்டுமானப் பணிகள் மீண்டும் எதிர்ப்பை கிளப்பியுள்ளன.
கடந்த 28 ஆம் தேதி கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் இரு தரப்பும் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டுமானப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினரும், பாரதிய ஜனதா கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது. பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் ஒருதலை பட்சமாகச் செயல்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக நடைபெறும் கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காகப் பொதுமக்கள் கோரிய அனுமதியும் காவல்துறையினரால் மறுக்கப்பட்டுள்ளது. திமுகவினரின் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி அதிகாரிகளும் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாக, அப்பகுதி மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்
மதுரை மாவட்ட நிர்வாகத்தின் ஒருதலைபட்ச முடிவால் இரு தரப்பினரிடையே மோதல் நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.