சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டனர்.
தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா முன்னிலையில் தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சார்பில் வழக்கறிஞர் குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து பேட்டியளித்த போராட்டக் குழு தரப்பினர், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாகவும் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தனர்.
கோரிக்கைகளை பற்றி பேசாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றுவது பற்றி மட்டுமே அமைச்சர்கள் பேசியதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், அடுத்தகட்டமாக முதலமைச்சருடன் மட்டும்தான் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை நள்ளிரவு போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர். வலுக்கட்டாயமாக அவர்களை கைது செய்த போலீசார் வாகனங்களில் ஏற்றினர்.