கவின் ஆணவப் படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் சித்தி மகனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்த ஐடி ஊழியர் கவின், கடந்த மாதம் 27-ஆம் தேதி நெல்லையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கவினின் காதலி சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து கவின் ஆணவப் படுகொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த 11-ம் தேதி மாலை 6 மணி முதல் இருவரையும் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். கொலை நடந்த இடத்திற்கு சுர்ஜித்தை நேரில் அழைத்துச் சென்று நடித்துக் காட்டக்கூறி ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர். மேலும், சுபாஷினி மற்றும் அவரது தாயாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் 4 பேரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கொலை நடந்த பிறகு சுர்ஜித் அணிந்திருந்த ரத்தம் படிந்த சட்டையை ஜெயபாலின் கல்குவாரியில் மறைத்து வைத்ததும், அவரது இருசக்கர வாகன பதிவு எண்ணை மாற்ற உதவி செய்ததும் தெரியவந்தது.
இதனால் கொலைக்கான தடயங்களை மறைத்தல், குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் ஜெயபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.