தூய்மைப் பணியாளர்கள் கைது மற்றும் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டது.
தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்திற்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும், தூய்மைப் பணியாளர்கள், வழக்கறிஞர்களிடம் காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் மூத்த வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, அனுமதி பெற்று போராட்டம் நடத்த எந்த வித தடையும் இல்லை என்றும், அனுமதி பெற்ற போராட்டத்தை காவல்துறை தடுத்தால் நீதிமன்றத்தில் முறையிடலாம் எனத் தெரிவித்தார்.
இதே போல் ஆட்கொணர்வு மனுக்களை விசாரிக்கும் நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், லட்சுமி நாராயணன் அமர்வில் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் முறையீடு செய்தார்.
போராட்டத்தில் ஈட்டுப்பட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுடன் இருந்த வழக்கறிஞர்களை காவல்துறையினர் தாக்கியதாகவும், அவர்களை கைது செய்து எங்கு வைத்துள்ளார்கள் என்ற தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என முறையிடப்பட்டது.