நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை உள்ளிட்ட துறைகளில் வீரதீர செயல்கள் மற்றும் சேவைகளுக்காக ஆயிரத்து 90 பேருக்கு குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
79வது சுதந்திர தினத்தையொட்டி, காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, குடிமைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தப் பணிகளுக்கான விருது பெறுபவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
இதில் வீரதீர செயல்களுக்கான விருது 233 பேருக்கும், சிறப்பு சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கங்கள் 99 பேருக்கும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகத்தான சேவையாற்றிய பிற துறைகளைச் சேர்ந்த 758 பேருக்கு சிறந்த சேவைக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தை தமிழகத்தைச் சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகள் பெற உள்ளனர்.
அதன்படி காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் பி.பால நாகதேவி, காவல்துறை தலைமை ஆய்வாளர்கள் ஜி.கார்த்திகேயன், எஸ்.லட்சுமி ஆகியோருக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
758 பேருக்கு சிறந்த சேவைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 21 காவல் துறை அதிகாரிகள் உள்பட 28 பேர் இந்த விருதை பெறுகின்றனர்.
மொத்தம் ஆயிரத்து 90 பதக்கங்கள் வழங்கப்பட உள்ள நிலையில், 152 விருதுகள் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.